மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பசுமையான காற்றோட்டமான, சுத்தமான மற்றும் அமைதியான சூழ்நிலையில் கட்டப்பட்டுள்ள கோவை அரசு சட்டக் கல்லூரியானது மொத்தம் 20.12 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. உயர்நிலை கல்வி பயின்ற மாணவர்களுக்கு 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி. முழு நேர படிப்பும், பட்டம் பயின்றோருக்கு 3 ஆண்டு எல்.எல்.பி முழு நேர படிப்பும் இளங்கைலை படிப்பும் இங்கு வழங்கப்படுகிறது. மேலும் முதுநிலை பட்டப்படிப்பில் வணிகச்சட்டம் மற்றும் வரிகள் சட்டம் என இரண்டு பிரிவுகள்
உள்ளது. மாணவ மாணவியருக்கென தனித்தனியாக விடுதிகள் மற்றும் விடுதி துணைக்காப்பாளர் குடியிருப்பு போன்றவை கல்லூரி வளாகத்திலேயே அமைந்துள்ளது.

சர்வதேச தரத்தில் உள்ள கோவை அரசு சட்டக் கல்லூரியானது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, அகில இந்திய பார் கவுன்சிலின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செயல்படுகிறது. மேலும் கல்லூரியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக கூடுதல் வகுப்பறைகள், 2000க்கும் மேற்பட்ட வாசகர்கள் பயிலக்கூடிய உயர் தொழில்நுட்ப நூலகம், மாதிரி நீதிமன்றம், 1000 பார்வையாளர்கள் அமரக்கூடிய கலையரங்கம், வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான பயோ மெட்ரிக் பதிவு வசதி, Wi-Fi வசதிகள் என ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.