கல்லூரியின் வரலாறு .

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரம், 1979 ஆம் ஆண்டு வரை சட்டக் கல்லூரியைத் தவிர ஏராளமான கல்வி நிறுவனங்களைக் கொண்டிருந்தது. தமிழ்நாடு முழுவதிலும், மாணவர்களுக்கு சட்டக் கல்வியை வழங்க, சென்னையில் ஒரே ஒரு சட்டக் கல்லூரி மட்டுமே இருந்தது. 1974 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தென்மாவட்ட மக்களின் வசதிக்காக கோவில் நகரத்தில் (மதுரை) மற்றொரு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது.

சட்டப்படிப்பில் சேர்வதற்கான தேவை அதிகரித்து வருவதாலும், ஏற்கனவே உள்ள இரண்டு சட்டக் கல்லூரிகளில் ஏற்கனவே மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், மாநிலத்தின் பல்வேறு மையங்களில் அதிக எண்ணிக்கையிலான சட்டக் கல்லூரிகளைத் திறக்க வேண்டிய அவசியத்தை அரசு உணர்ந்தது.

மாநிலத்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதி மக்களின் நலன்களுக்காக முறையே தொழில் நகரத்திலும் (கோயம்புத்தூர்) மற்றொன்று ராக் சிட்டியிலும் (திருச்சிராப்பள்ளி) மேலும் இரண்டு சட்டக் கல்லூரிகளைத் துடங்குவதற்கான முன்மொழிவு அப்போதைய சட்டக் கல்வி இயக்குநர் பேராசிரியர் எஸ்.மாஸ்டர் சங்கரன் எம்.எல்., என்பவரால் அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டு அது 02.08.1979 தேதியிட்ட தமிழ்நாடு அரசாணை எண் G.O.Ms.No.1407 Edn. இல் அங்கீகரிக்கப்பட்டது. சென்னை சட்டக் கல்லூரியின் பேராசிரியர் டி.ஆதிஷேசன் என்பவர் இதற்கான தனி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

அரசு சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர் கடந்த 1979 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கோவை அவிநாசி ரோட்டில் உள்ள GEE DEE Hopt. என்ற இடத்தில் உள்ள கட்டிடத்தில் துவங்கப்பட்டது. பின்னர் 1980-ம் வருடம், கோவை பந்தய சாலை எண் 9-பி, என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டு 1991 ஆண்டு ஜனவரி மாதம் வரை இயங்கி வந்தது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பசுமையான காற்றோட்டமான, சுத்தமான மற்றும் அமைதியான சூழ்நிலையில் கட்டப்பட்டுள்ள கோவை அரசு சட்டக் கல்லூரியானது மொத்தம் 20.12 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. உயர்நிலை கல்வி பயின்ற மாணவர்களுக்கு 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி. முழு நேர படிப்பும், பட்டம் பயின்றோருக்கு 3 ஆண்டு எல்.எல்.பி முழு நேர படிப்பும் இளங்கைலை படிப்பும் இங்கு வழங்கப்படுகிறது. மேலும் முதுநிலை பட்டப்படிப்பில் வணிகச்சட்டம் மற்றும் வரிகள் சட்டம் என இரண்டு பிரிவுகள்
உள்ளது. மாணவ மாணவியருக்கென தனித்தனியாக விடுதிகள் மற்றும் விடுதி துணைக்காப்பாளர் குடியிருப்பு போன்றவை கல்லூரி வளாகத்திலேயே அமைந்துள்ளது.

சர்வதேச தரத்தில் உள்ள கோவை அரசு சட்டக் கல்லூரியானது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, அகில இந்திய பார் கவுன்சிலின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி செயல்படுகிறது.. மேலும் கல்லூரியின் தரத்தை மேம்படுத்தும்
நோக்கில் புதிதாக கூடுதல் வகுப்பறைகள், 2000க்கும் மேற்பட்ட வாசகர்கள் பயிலக்கூடிய உயர் தொழில்நுட்ப நூலகம், மாதிரி நீதிமன்றம், 1000 பார்வையாளர்கள் அமரக்கூடிய கலையரங்கம், வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப்
பணியாளர்களுக்கான பயோ மெட்ரிக் பதிவு வசதி, Wi-Fi வசதிகள் என ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.